கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய விருப்பம் தெரிவித்து இந்தியா இலங்கைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக நம்பகமான இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி இந்திய அரசாங்கத்தின் சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த செய்தியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை பராமரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அதானி மற்றும் அவர்களின் உள்ளூர் பங்குதாரர் (ஜோன் கீல்ஸ்) ஏற்கனவே இது தொடர்பில் அனுமதி அளித்துள்ளனர். இந்திய அரசின் வெளிநாட்டு முதலீட்டு பங்காளியான ஜப்பானுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சு வெற்றிகரமாக முடிவடையும் என்று தூதரகம் கூறுகிறது.
மேற்கு முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய ஒப்புக்கொண்டதால் துறைமுகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் குறையும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.