நாட்டில் நேற்றைய தினம் 543 பேருக்கு கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுள் 528 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், எஞ்சிய 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.
5 ஆயிரத்து 589 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் நாட்டில் கொவிட்19 தொற்றில் இருந்து மேலும் 890 பேர் நேற்று குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் மேலும் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என்றும், மற்றையவர் பூநகரி வலைப்பாடு பகுதியில் தொற்றுறுதியானவருடன்; நேரடித் தொடர்புடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழிப்பாணத்தில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது மக்கள் ஒன்றும் கூடும் சகல இடங்களிலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.