மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெள்ளை வானில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு குறித்த யுவதியை கடத்தி சென்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டை சம்பவ தினமான இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கியுள்ளார்.
எனினும் கடத்தல்காரர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளார் .
இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இதேவேளை இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில், இரு பெண் பிள்ளைகள் உள்ள ஒரு வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளைவான் ஒன்றில் நான்கு பேர்கொண்ட குழுவுடன் வந்த, நாடாளுமன்ற வேட்பாளரான நா.விஸ்ணுகாந்தன், வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து, வாசல் கதவையும் உடைத்து உள்நுழைந்த , வீட்டின் உரிமையாளரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யுவதியை கடத்தியவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர், இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் எனவும், அவருக்கு திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.