2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இந்த நிதியை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து, கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே 2 கோடி ரூபாயை பதிவாளர் அலுவலகத்தில் செலுத்திவிட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22-ந்தேதி அனுமதி அளித்தது.
இந்த நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி எம்.கே. நாக்பால், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை ஏற்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.