ஜெனீவாவில் தனது செயல்வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே கோரியுள்ளார்.
இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜயனத் கொலம்பகே இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, “தென்னாசிய நாடுகள் ஜெனீவாவில்ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையும்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாக்கிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் இலங்கையை போன்று கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் எங்கள் ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார். ஏனென்றால் தென்னாசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகும்.
அத்துடன் இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது. நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை நாங்கள் அயலவர்களிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாகவே இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.