ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் முன்வைத்த யோசனைகளை பரிசீலித்த பின்னர், திருத்தப்பட்ட யோசனையை முன்வைப்பதாக மனித உரிமைகள் பேரவை முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய, முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில், குறிப்பிடத்தக்களவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்ததன் பிரகாரம், இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்களை தடை செய்தல் அல்லது அவர்களுக்கு பயணத்தடை விதித்தல் என்பன திருத்தப்பட்ட பிரேரணையில் உள்ளீர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பாரப்படுத்துவதும் புதிய பிரேரணையில் உள்ளீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்க அவசியமான ஆதாரங்களை திரட்டுதல், உறுதிப்படுத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் என்பன அவசியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன தொடர்பில், எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், தொடர்ந்தும் ஒதுக்கப்படுதல், அழுத்தங்களுக்கு உள்ளாதல் என்பனவற்றைத் தடுப்பதும், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக வகிபாகத்தை பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான வரையறைகளை விதிப்பதற்காக, நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக திருத்தப்பட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.