காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானும் எனது உறவுகளையும், நான் நேசிக்கும் மக்களையும் இழந்தவன் என்றவகையில் அத்தகைய இழப்புக்கள், வலிகளின் வேதனைகளையும், துயரங்களையும் நன்கு அறிந்தவன். எனவேதான் காணாமல்போன உறவுகளின் தேடலுக்கும், கோரிக்கைக்கும் பரிகாரம் காணவேண்டும் என்று விரும்புகின்றேன்.
இவ்விடயத்தில் தீர்வொன்று காணப்பட வேண்டும். அது தீராப்பிரச்சனைகளாகத் தொடர்வதால் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. .
இந்தப்பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துகின்றவர்களும், பதாதைகளை பார்வைக்கு வைத்து பணம் சம்பாதிப்பவர்களுமே இப்பிரச்சனை தீராப்பிரச்சனையாகத் தொடர வேண்டுமென விரும்புகின்றார்கள்.
ஆனால் நாம் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கும், காயங்களுக்கும் ஆறுதலளிக்கும் பரிகாரங்களைக் காண்பதன் ஊடாக அவர்களை நம்பிக்கையான எதிர்காலம் நோக்கி முன்னகர்த்தவே விரும்புகின்றேன்
அதனடிப்படையில் பதாகைகளை அல்ல பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கே நான் உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கிறேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் கலந்துரையாடி பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் முயற்சித்து வருகின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்


















