தற்போதைய அரசாங்கம் சுற்றாடல் அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்களையும் சிறுவர்களை கண்டு அஞ்சுகிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு சிங்கராஜ வன அழிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யுவதிக்கு தலைவணங்கி அவரை நாம் மதிக்கின்றோம்.
எனினும் தற்போதைய அரசாங்கம் சுற்றாடல் அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்களையும் சிறுவர்களை கண்டு அஞ்சுகிறது. ஏன் இவ்வாறு சிறுவர்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அழிவு சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளினூடாக ஆரம்பித்துள்ளது.
தற்போது சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இலங்கை வரலாற்றில் இயற்கை சூழலுக்கு இவ்வாறானதொரு பாதிப்பை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் மாத்திரமேயாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரமும் முடக்கப்படுகிறது. இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தயாராகவுள்ளது. அத்தோடு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி பாக்யா என்ற யுவதிக்கு அவசியமான சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.
குறித்த யுவதியை விசாரணைக்கு உட்படுத்தி அவரை துன்புறுத்தாமல் அவரால் கூறப்பட்ட உண்மை சம்பத்துடன் தொடர்புகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். குறித்த யுவதிக்கு மனதளவில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு இதனுடன் தொடர்பு காணப்படுகின்றமை தெளிவாகிறது என்றார்.



















