ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் கடந்த 27 ஆம் திகதி மாத்தறையில் பிடபெத்தர, கிரிவெல்கெல கிராமத்தில் தேரங்கல மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சென்றிருந்தார்.
இதன்போது சிறுமி ஒருவர் ஜனாதிபதியிடம் தனது பாடசாலை குறித்து முன்வைத்த கோரிக்கைக்கு விரைவில் தீர்வு தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
“தேரங்கல மகா வித்தியாலயத்தில் மழையில் நனையும் கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடம் வழங்கப்படும்” என்று ஜனாதிபதி சிறுமிக்கு கூறினார்.
ஆனால் இப்போது பள்ளியில் புதிய கட்டடத்திற்கு பதிலாக பாழடைந்த பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
எனினும் நிலவும் சூழ்நிலைகளால் இந்த ஆண்டு புதிய கட்டடங்கள் கட்டக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், 27 ஆம் திகதி கிராமத்துடனான கலந்துரையாடலில் பள்ளிகளை புதுப்பித்தலின் கீழ் இந்த ஆண்டு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பாடசாலைகள் புனரமைப்பின் கீழ் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு குறித்த பாடசாலையும் சேர்க்கப்பட்டுள்ளது என இதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் செயலாளரும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பழைய கட்டடங்கள் புனரமைக்கப்படுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.