தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உட்பட எதிர்கட்சியிலுள்ள பல உறுப்பினர்களின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி அரசியல் பழிவாங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏப்ரல் குண்டுதாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் அரசாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விமர்சித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் அரசாங்கம் தனது அரசியல் விரோதிகளை இல்லாமலாக்க திட்டமிட்டிருப்பது தெளிவாகின்றது. அரச தலைவர் கோட்டாபய ஹிட்லர் போன்று செயற்படவேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் சிலர் தெரிவிக்கின்றனர். ஹிட்லர் அன்று ஒரு இரவில் தனது அரசியல் விரோதிகள் அனைவரையும் இல்லாமக்கி இருந்தார். அதேபோன்று இந்த அரசாங்கம் ஒரு அறிக்கை மூலம் தனது அரசியல் விரோதிகளை இல்லாமலாக்க திட்டமிட்டிருக்கின்றது.
மேலும் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கப்போவதாக தெரியவருகின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு தலைவர் தான் அனுரகுமார திஸாநாயக்க. அவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி அவரது அரசியல் நடவடிக்கையை நிறுத்த முடியாது. அதேபோன்று ஆர். சம்பந்தனின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி வடக்கு மக்களுக்கு அரசாங்கம் எதை சொல்லப்போகின்றது.
ஜனநாயக முறை சரியில்லை, மீண்டும் ஆயுதம் தூக்கவா தெரிவிக்கப்போகின்றீர்கள்? மேலுமொரு பிரபாகரனை உருவாக்கப்போகின்றீர்களா? மேலும் சுமந்திரனுக்கு இன்றும் சர்வதேச புலி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. ஒற்றையாட்சிக்கு ஆதரவாக செயற்படும் ஒரு தலைர். அவரது பிரஜா உரிமையை இல்லாமலாக்கி பிரபாகரன் போன்றவர்களை உருவாக்குவதா அரசாங்கத்தின் திட்டம். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவராக ரவூப் ஹக்கீம் ஒரு நடுநிலையான ஜனநாயக தலைவர்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொர்பில் அரச தரப்பினர் அதிகம் கதைக்கின்றனர். ரவூப் ஹக்கீம் போன்ற தலைவரது பிரஜா உரிமையை இல்லாமலாக்கி, சஹ்ரான்களை உருவாக்கப்போகின்றதா. அதேபோன்று ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமாரக செயற்பட்ட தலைவர். அவரது பிரஜா உரிமையை இல்லாமாக்குவதன் நோக்கம் என்ன? அதேபோன்று எதிர்கட்சியில் இருக்கும் சரத் பொன்சேகா, ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் தான் 2015 அரசாங்கம் உருவாகுவதற்கு பிரதான சூத்திரதாரிகளாகும்.
அதனால் தான் அவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களது பிரஜா உரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக சஹ்ரான் உட்பட குழுவின் படத்தை நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தி நேற்று கொண்டாடினார்கள்.
இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு வழிசமைத்தமைக்காக இவர்கள் சஹ்ரானை கொண்டாடினார்கள். மேலும் ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க கடும் முயற்சியுடன் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவுக்கு இந்த அரசாங்கம் தண்டனை வழங்கி இருக்கின்றது. அரச அதிகாரிகளை இவ்வாறு செயற்படுத்தும்போது காவல் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக செயற்படமுடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.



















