தமிழகத்தில் இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பிரபு (35). கூலித் தொழிலாளி.
இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இந்தத் தம்பதியருக்கு பிருந்தா (7) மற்றும் பிரசந்தா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதற்கிடையில் தம்பதியரிடையே கருத்துவேறுபாடு எழுந்ததால், இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.
தமிழ்ச்செல்வி தனது அண்ணன் மற்றும் தாயுடன் திருப்பூர் மாவட்டம், பல்லடம் குப்புசாமி நாயுடுபுரத்தில் கடந்த 9 மாதங்களாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர், மீண்டும் பிரபுவுடன் சேர்ந்து வாழப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழ்ச்செல்விக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த பிரபுவை குப்புசாமி நாயுடுபுரத்துக்கு தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் அழைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இதில் விருப்பம் இல்லாத தமிழ்ச்செல்வி, தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தினார்.
இதனையடுத்து மயக்கம் அடைந்த நிலையில் இருந்த தாய் மற்றும் பிள்ளைகள் மீட்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மூத்த மகள் பிருந்தா சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்த நிலையில் தமிழ்ச்செல்வி மற்றும் பிரசந்தா ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.
எனினும் அங்கு இளைய மகள் பிரசந்தா சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் உயிரிழந்த நிலையில், தமிழ்ச்செல்வி தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்பாகப் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்