பிரான்சில் வரும் ஜூன் 30-ஆம் திகதியில் முழுமையாக ஊரடங்கு விதிகளை தளர்த்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் திட்டமிட்டுள்ளார்.
பிரான்சில் ஏப்ரல் 3-ஆம் திகதி முதல் மூன்றாவது தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை படிப்படியாக தளர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான 4-கட்ட திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் மே 3-ஆம் திகதி தொடங்கி படிப்படியாக ஜூன் 30-ஆம் திகதிக்குள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மே 3-ஆம் திகதி முதல் மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திரும்பத் தொடங்கப்படும். உள்நாட்டு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
மே 19-ஆம் திகதி முதல், தற்போதைய 7 மணி இரவு ஊரடங்கு உத்தரவு 9 மணிக்கு தள்ளப்படும். காஃபி ஷாப் மற்றும் உணவகங்கள் வெளிப்புறங்களில் மீண்டும் திறக்கப்படும். அத்தியாவசியமற்ற கடைகள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தியேட்டர்கள் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும்.
ஜூன் 9-ஆம் திகதி முதல், இரவு ஊரடங்கு உத்தரவு மீண்டும் 11 மணிக்கு தள்ளப்படும். அரங்கங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கும், நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் “ஹெல்த் பாஸ்” அறிமுகப்படுத்தப்படும்.
ஜூன் 30-ஆம் திகதி முதல், ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக நீக்கப்படும், ஆனால் இரவு விடுதிகள் (nightclubs) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.