இஸ்ரேல் நாட்டில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளதுடன், 103 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திக் குறிப்பில், இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் சிக்கி பலியானார்கள், 103 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.
மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.
சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை.
இதுபற்றி பொலிஸார் மேலதிய விசாரணைகளை நடத்தி வருகின்றனர் – என்றுள்ளது.