மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர்சோசை மற்றும் மாவட்ட அரச அதிபர் ஸ்டான்னி டிமெல் ஆகியோருக்கு எதிராக மன்னார் கோயில்மோட்டை விவசாயிகளால் வவுனியா நகரில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனமொன்றிற்கு காணி வழங்கும் நடவடிக்கைளுக்கெதிராக கோயில் மோட்டை விவசாயிகளால் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அது இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அப்பாவி ஏழை விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை ஒரு மத ரீதியான வன்முறையாக மாற்றி மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்களும் தாம் தப்பிக்க முயற்சித்து வருகிறார்கள்.
எனவே இந்த போராட்டம் தொடர்பான உண்மை பின்னணியை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றோம்.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் அரச காணியில், இப்பகுதி விவசாயிகள் கடந்த 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக முன்னாள் மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்க மடு திருத்தல பரிபாலனசபைக்கு பணமாகவும், நெல்மூட்டைகளாகவும் விவசாயிகள் காணிக்கை கொடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த காணிகளை தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்குமாறு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்கள் 20.01.2021 அன்று மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது. பின்னர் வடமாகாண ஆளுனரின் பிரதிநிதியாக உதவி வடமாகாண காணி ஆணையாளர் வருகைதந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததார்.
பின்னர் பத்து நாட்களிற்குள் இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குவதாக தொலைபேசிஊடாக தொடர்புகொண்ட வடமாகாண பிரதம செயலாளரும் வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் அப்பாவி விவசாயிகள் வயிற்றுப்பிழைப்பிற்காக முன்னெடுத்த போராட்டத்தை தங்களின் குறைகளை மறைத்து சுயநலத்திற்காக இந்து கிறிஸ்தவ பிரச்சனையாக மாற்ற குருமுதல்வர் விக்டர்சோசையும், அரச அதிபர் நந்தினி ஸ்டான்லி டிமெல் அவரகளும் முயற்சிசெய்து வருகின்றனர்.
அந்த காணிகளை தங்களின் விருப்பப்படி எடுத்துக்கொள்ளும் நோக்கில் இந்தப்போராட்டம் ஆயர் இல்லத்திற்கு எதிரான போராட்டம் என்று பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டினை அவர்கள் இருவரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஏழை விவசாயிகளிடம் இருந்து காணிகளை பறித்து தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப்போராட்டத்தை முன்னெடுத்த 27 குடும்பங்களில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பங்களே.
விக்கடர் சோசை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுடன் இணைந்து அவரது உறவினர்களிற்கு அரச வேலைவாய்ப்புக்கள் உட்பட பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல பல அரசியல் பிரச்சார மேடைகளில் ஏறி தமிழரின் காவலர் றிசாட் என குறிப்பிட்ட இலங்கையின் ஒரே ஒரு அரச ஊழியர் என்ற பெருமையை மன்னார் அரச அதிபர் பெறுவார்.
தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்களை பொதுமேடைகளிலும், பாராளுமன்றிலும் இழிவுபடுத்திவந்த றிசாட் பதியூதீனின் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்கள் செயற்ப்பட போகின்றீர்களா அல்லது நியாயத்தின் பக்கம் நின்று கோவில் மோட்டை விவசாயிகளிற்கு ஆதரவாக செயற்ப்படபோகின்றீர்களா என்று குறித்த பிரசுரத்தில் உள்ளது.