யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் விடுதிகள் இன்றிலிருந்து செயற்பட ஆரம்பிக்கவுள்ளன.
கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் வடக்கில் உள்ள மாவட்ட மற்றும் ஆதார மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச மருத்துவமனையிலும் ஆண், பெண் விடுதி என்று அமைக்கப்பட்டு அவற்றுக்கு தலா 20 கட்டில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவை இன்றிலிருந்து செயற்படவுள்ளன.
அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தற்போதைய நிலையில் ஒரு விடுதி இன்றிலிருந்து செயற்படவுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 700 பி.சி.ஆர். மாதிரிகள் நாள் ஒன்றுக்கு பெறப்பட்ட நிலையில் அது ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் வடக்கில் பெறப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிறிதரன் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், முன்னர் மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையை விட 300 மாதிரிகள் நாள் ஒன்றுக்கு மேலதிகமாகப் பெறப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.