எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!
கூந்தலின் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் பயன் படுத்தும் எண்ணெய் பக்க பலமாக இருக்கிறது. முடி உதிர்வு, பொடுகு பிரச்சினை, முடி வளர்ச்சி போன்றவற்றை கவனத்தில் கொண்டு பல விதவிதமான எண்ணெய்வகைகளை சிலர் உபயோகிக்கிறார்கள். எல்லா வகை எண்ணெய்யும் எல்லோருடைய கூந்தலுக்கும் ஒத்துக்கொள்ளாது. பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் எதுவென்று பார்ப்போம்!
ஆலிவ் எண்ணெய்: கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றதுதான். ஆனால் மிருதுவான, நேரான முடியை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய்யை தவிர்த்துவிடலாம். அதனை தடவினால் கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் காட்சியளிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் ஒலிரோபெயின் எனும் மூலக்கூறு அப்படிப்பட்ட கூந்தல் கொண்டவர்களின் முடி வளர்ச்சியை நேரடியாகவே பாதிக்கும். மேலும் ஆலிவ் எண்ணெய் சரும துளைகளை அடைத்து முகப்பருவை தூண்டக்கூடியது. அதனால் ஆலிவ் எண்ணெய் தேய்த்த பிறகு முகப்பரு தோன்றுவதாக உணர்ந்தால் அதனை கூந்தலுக்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
விளக்கெண்ணெய்: முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் துணைபுரிந்தாலும் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கூந்தலில் தடவியதும் முடிகளில் சிக்கு ஏற்பட்டாலோ, முடி உதிர்ந்தாலோ விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.
மினரல் ஆயில்: இதில் பெரும்பாலும் பாரபின் மெழுகு, பெட்ரோலியம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை கூந்தலில் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி முடி உதிர்வை அதிகப்படுத்தும். உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, சொறி, வீக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
கற்பூர எண்ணெய்: இது முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். உச்சந்தலையில் வறட்சி ஏற்படவும் வழிவகுக்கும். முகப்பரு, தடிப்பு, பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக இதில் நன்மையைவிட தீமையே அதிகம்.
எலுமிச்சை எண்ணெய்: எலு மிச்சை சாறையோ, எலுமிச்சை எண்ணெய்யையோ சிலர் தலையில் தடவு வார்கள். எலுமிச்சை எண்ணெய்யில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரியாக கலக்கப்படவில்லை என்றால் தீங்கு விளைவிக்கும். மேலும் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் மயிர்க்கால்களை சுருங்கவும் செய்துவிடும்.
சரும டாக்டரின் ஆலோசனைப்படி கூந்தலுக்கு பொருத்தமான எண்ணெய்யை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.