கோவிட் – 19 அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு பிரத்யேக முனையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஏனைய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுடன் வரிசையில் நின்ற நிலையில், அரசாங்கத்திற்கு எதிராகவும், விமான நிலையத்திற்கு எதிராகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஜூன் முதலாம் திகதியிலிருந்து சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து பயணிகள் மூன்றாவது முனையத்தின் ஊடாக பயணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பசுமைப் பட்டியலில் 12 நாடுகள் சேர்க்கப்பட்ட பின்னர் விமான நிலையத்தின் வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது பசுமைப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
பெரும்பாலான நாடுகள் அபாயம் ஏற்படக்கூடிய பட்டியலில் (Amber list Country) உள்ளன, அதாவது பயணிகள் திரும்பி வரும்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்காக ஒரு பிரத்யேக முனையத்தைத் திறப்பது, அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டியது “மிகவும் சவாலானது” என்று ஹீத்ரோ விமான நிலையம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான வருகை முனையம் இறுதியில் முனையம் நான்கிற்கு மாற்றப்படும் என்றும், இந்த ஏற்பாடு சில காலம் நடைமுறையில் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“சிவப்பு பட்டியல் வழிகள் இங்கிலாந்தின் பயணத்தின் ஒரு அம்சமாக இருக்கும், ஏனெனில் நாடுகள் தங்கள் மக்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் தடுப்பூசி போடுகின்றன.
“சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து நேரடி விமானங்களில் வரும் பயணிகளுக்காக ஜூன் முதலாம் திகதி முதல் முனையம் மூன்றில் ஒரு பிரத்யேக வருகை வசதியை ஏற்படுத்துவதன் மூலம் ஹீத்ரோ விமான நிலையத்தை இந்த நீண்ட கால யதார்த்தத்திற்கு மாற்றியமைக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.