உலக அளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக கோடைக் காலங்களில், பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பிரான்சில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பிரித்தானியா நாட்டில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளை கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் பி.1.617 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் பரவி வருவது கண்டறியப்பட்டதே, பிரான்ஸ் அரசின் இந்த உத்தரவுக்கு காரணமாகும்.
ஏற்கனவே இதற்கு முன்பாக ஆஸ்திரியா நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில், பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிப்பதாக தெரிவிக்கப்படிருந்தது. அதே போல், ஜெர்மனி அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இங்கிலாந்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 2 வாரம் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று அதிக வீரியம் கொண்டது என்றும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரான்ஸ் அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.