சீனா, கொழும்பில் நிர்மாணித்து வரும் துறைமுக பொருளாதார நகரத்தை “இலங்கையின் சீன மாகாணம்” என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை எதிர்க்கட்சியினரின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்திய ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலமாக 600 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்துக்கான சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதை, சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கவும் இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் இந்த சட்டமூலத்தை “சீன மாகாண சட்டமூலம்” என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சீனாவிடம் 2,000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்று உருவாக்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு தாரைவார்த்துள்ளனர்.
இரண்டாவதாக இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப் பகுதியின் புதிய நகரத்தையும் சீனாவுக்கே அளித்துவிட்டதால் வரும் நாள்களில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்’ என, எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.
‘சீனாவிடம் அளவில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், முதலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், 70 சதவீத உரிமையாளராக சீனாவும், 30 சதவீத உரிமையாளராக இலங்கையும் மாறியுள்ளன. தற்போது மீண்டும் 1.4 பில்லியன் டொலர் கடனில் சிறப்புப் பொருளாதார நகரத்தை உருவாக்கி அதையும் சீனா வசம் ஒப்படைக்கிறது இலங்கை.
இது இலங்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்’ என, பெருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.