நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரியில் அதிகபடியான 270 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதுடன், மூன்று பேர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. இதன்படி கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது. இதனால் உரிய பொறியியல் தொழில்நுட்பத்துடன் கட்டப்படாத வீடுகளில் வசிக்கும் மக்கள், 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யும் பட்சத்தில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்த கங்கைகளை அண்மித்த ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் மண் மேடு சரிந்ததில், அதில் சிக்குண்டு மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மண் சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.