சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை காலமும் எதிர்கொண்டிருக்காத வகையிலான பாரிய அனர்த்தமொன்றை நோக்கி எமது நாடு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கைகளால் பொருளாதார ரீதியில் சரிவை எதிர்கொண்டிருப்பது மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளிடமிருந்து நாம் தனிமைப்பட்டிருக்கிறோம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே இவ்வாறு மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதகுருமார்களையும், அடிப்படைவாதிகளையும் கொண்டு அரசியலமைப்பைத் தயாரித்த நாடுகளின் கதியை மறந்துவிடக்கூடாது
இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை சரியான பாதையில் நகர்த்திச்செல்வதற்கு அவசியமான அத்திரவாத்தை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இடவேண்டியது அவசியமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் நாடளாவிய ரீதியிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது: இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை காலமும் எதிர்கொண்டிருக்காத வகையிலான பாரிய அனர்த்தமொன்றை நோக்கி நாம் இப்போது தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
1948 ஆம் ஆண்டளவில் ஆசியநாடுகளின் அபிவிருத்தியை, குறிப்பாக அவற்றின் மொத்தத்தேசிய உற்பத்தியை எடுத்துநோக்குகையில் ஜப்பான் மாத்திரமே முன்னிலையில் காணப்பட்டது. லீ-குவான்-யூ அவரது சுயசரிதையில், இலங்கை சுதந்திரமடைந்தபோது ஏனைய அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக நாடாக விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று தெற்காசியாவில் இலங்கை மாத்திரமே அபிவிருத்தியடைந்த நாடாக விளங்கியது. அவ்வாறிருந்த எமது நாடு இப்போது பங்களாதேஷிடம் கடனடிப்படையிலான நிதிப்பரிமாற்றத்தைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் உருவான, மிகவும் வறியநாடாகக் கருதப்பட்ட பங்களாதேஷிடமிருந்து 200 – 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான மேற்படி நிதியை இலங்கை பெறவுள்ளது.
தற்போதும் பங்களாதேஷுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும். எமது நாடு ‘புரொபெஷனல் பெகர்ஸ்’, அதாவது தொழில் முறையிலான யாசக நாடாக மாறியுள்ளது.
மேலும் அண்மையில் எமது கடற்பரப்பில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதனால் நாம் குறிப்பிட்டளவு நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் கூறுகின்றார்கள்.
இவையனைத்தையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாம் மிகப்பாரிய சமூகப்பேரழிவை நோக்கிப் பயணிப்பது புலனாகின்றது. இப்போது நாம் பல்வேறு அடிப்படைகளில் பிளவுபட்டு செயற்படாமல் ஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.
இப்போது இன, மதரீதியில் பிளவுபடுவோமானால் நாம் எதிர்பார்க்காத தரப்பொன்றினால் எமது முழுக்கட்டமைப்பும் சீரழிக்கப்படும். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைத்தபோது 13 ட்ரில்லியன் டொலர் கடன் காணப்பட்டது. எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஒருவருடகாலத்திற்குள்ளேயே 2 ட்ரில்லியன் டொலர் கடன்களைப் பெற்றுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் ஒருவருடத்தில் இத்தகைய பெருந்தொகையான கடன் பெறப்பட்டது இதுவே முதற்தடவையாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாறு கடன் பெறப்பட்டது என்று கூறமுடியாது. ஏனெனில் அதற்கென பிறிதொரு நிதியம் இருக்கின்றது.
ஆகவே நாட்டின் பொருளாதாரம் 2020 மார்ச் மாதமளவில் முழுமையாக வீழ்ச்சியடையும் நிலையிலிருந்த போது தான் கொரோனா வைரஸ் பரவலும் ஏற்பட்டது.
அரசாங்கத்தின் இந்தக் கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சிகண்டதுடன் மாத்திரமன்றி, நாம் சர்வதேச சமூகத்திடமிருந்து விலகியிருக்கிறோம். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமோ அல்லது உலகவங்கியிடமோ உதவி பெறுவதில்லை.
தனியொரு நபரின் தேவைகளுக்கு ஏற்றவாறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறுவதனாலும் எமது நாடு மூன்றாம் உலகநாடுகளையும் விட கீழான நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று அனைவருக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் நாடளாவிய ரீதியிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு உகந்த நேரம் இதுவா? என்ற கேள்வி எழுகின்றது. கடந்த காலங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்யக்கூடிய சுதந்திரம் காணப்பட்டது.
எனினும் தற்போதைய அரசாங்கம் தனியொரு அதிகாரமையத்திடம் மாத்திரம் சிக்கிக்கொண்டு, ஏனைய நாடுகளிடமிருந்து விலகியிருக்கின்றது. இந்த நிலை தொடருமாக இருந்தால், எமது நாடு சிரியாவின் நிலையையே அடையநேரிடும். தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி அதன் பொறுப்பை சரியாகச் செய்கின்றதா என்பது கேள்விக்குரிய விடயமேயாகும்.
எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நாம் அத்திவாரம் இடாமல், வீடொன்றைக் கட்டுவதற்கு முற்பட்டோம். ஆகையினாலேயே புதிதாக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைகின்றன.
ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கு அவசியமான அத்திவாரத்தை இடவேண்டும். அதற்காகக் குறிப்பாக மிகவும் சக்திவாய்ந்த ஜனநாயகத்தையும், ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரத்தையும் ஜனாதிபதி முதல் சாதாரண பொதுமக்கள் வரை அனைவருக்கும் ஒரேவிதமாக செயற்படும் சட்டத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.