எந்த வேலைத்திட்டங்களும் இன்றி இரசாயன உரங்களை தடை செய்தன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை கொல்லாமல் கொலை செய்வது என்பது தெளிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவசரமாக எடுத்துள்ள இந்த தன்னிச்சையாக தீர்மானம் காரணமாக நாட்டுக்குள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு அது மோசமான நிலைமை நோக்கி செல்வதை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கை உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தொடர்பில் எந்த எதிர்ப்பும் இல்லை.
எனினும் தூரநோக்கமின்றி, மிகவும் அவசரமாக இரசாயன உரங்களை தடை செய்தமையானது நாட்டு மக்களின் வாழ்க்கை மீது மேற்கொள்ளும் கொலை தாக்குதல் என்பதை அரசாங்கம் நீண்டகாலம் செல்லும் முன்னர் உணர்ந்து அனுபவிக்கும்.
இரசாயன உரங்களை தடைசெய்து விட்டு, இயற்கை உரத்தை இறக்குமதி செய்ய போவதாக அரசாங்கம் கூறுகிறது.
இது பாரதூரமான ஆபத்தை கை நீட்டி அழைப்பதாகும். இதன் ஊடாக எமது நாட்டை உலகில் மிகப் பெரிய குப்பை மேடாக மாற்ற அரசாங்கம் சதித்திட்டம் போடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குப்பை உரங்களை இறக்குமதி செய்தவதால், நாட்டிற்குள் பல்வேறு வகையான பூஞ்சைகள், ஆபத்தான நுண்ணுயிர்கள் பரவக் கூடும். இப்படியான இறக்குமதி விலங்கு மற்றும் தாவரங்கள் சட்டத்திற்கு எதிரானது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.