உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “பாரதியின்” பாடலை சுட்டிக்காட்டி பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தனி ஒருவருக்கு உணவு இல்லையெனின் இந்த பூலோகமே மனிதருக்கு தேவையில்லை என்றவாறு பாடினான் பாரதி.
ஆனால் – ஒவ்வொரு நாளும் இந்த பூவுலகில், 69 கோடி மக்கள் பசித்த வயிற்றோடு இரவு படுக்கைக்குச் செல்கின்றார்கள் என்பது ஒரு கொடூரமான தரவு அல்லவா…?! உணவு என்பது ஒவ்வொரு மனிதரதும் உரிமை.
அதிலும், குறிப்பாக, ஆரோக்கியமான, நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான உணவு என்பதே அந்த உரிமையின் உண்மையான அர்த்தம் என்பதோடு, இந்த பூலோகத்தை அடுத்த உயிரினங்களோடு பகிர்ந்து வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே, அடுத்தவர்களின் அந்த தூய உணவுக்கான உரிமையை மதிக்க வேண்டும்.
இன்று உலக உணவு பாதுகாப்பு நாள் -World Food Safety Day!
எனது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்துருப்பதாலேயே – எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் – எமது நாட்டின் விவசாயத்தைச் சேதனப் பசளைக்கு முழுமையாக மாற்றுவதில் நான் விடாப்பிடியாக நிற்கின்றேன்.
எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டின் விவசாயத்திலும், எமது மக்களின் உணவுப் பழக்கத்திலும் நாம் ஏற்படுத்துகின்ற இந்த புரட்சிகரமான மாற்றமானது – இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும். உடல் ஆரோக்கியமும் மனச் செழுமையும் சிந்தனைப் பொலிவும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் – எமது அரசாங்கத்தோடு கைகோர்க்குமாறு எம் நாட்டு விவசாயப் பெருமக்கள் அனைவரையும், இன்றைய நாளில் நான் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.