இந்திய மாநிலம் ராஜஸ்தானில் அரசு பள்ளி ஆசிரியர் பல முறை சீரழித்ததில், 13 வயது மாணவி கர்ப்பம் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் ஜோத்புர் மாவட்டத்தில் உள்ள ஷேர்கா பகுதியில் உள்ள மொகம்கர் அரசு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவி 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் கடும் வயிற்றுவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார். அதனால் அச்சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார்.
சிறுமி, அவர் படிக்கும் பள்ளியில் சுஜாராம் என்ற ஆசிரியரால் வகுப்பறையிலேயே வைத்து, மார்ச் மாதத்தில் குறைந்தது 4 முறை கற்பழிக்கப்பட்டுள்ளார்.
சுஜாராமின் இந்த செயலுக்கு சாஹிராம் எனும் மற்றோரு ஆசிரியரும் உதவி செய்துள்ளார். ஆசிரியர்கள் இருவரும், நாங்கள் சொல்வதை கேட்க மறுத்தால் பரீட்சையில் ஃபெயில் செய்துவிடுவோம் என பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டியுள்ளனர்.
விவரம் அறிந்த உடனே, பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
ஆனால், விடயம் வெட்டவெளிச்சமானது தெரிந்த உடனே ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநில முதல்வரின் சொந்த ஊரில் நடந்துள்ளதால் பரபரப்பாக பேசப்படுகிறது.