தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தென் கொரிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்பந்த காலத்தில் பணிபுரிந்த சுமார் 2000 இலங்கை தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு காலம் காலாவதியான பின்னர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ள காலப்பகுதியில், இலங்கைக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று தென் கொரிய அரசு இலங்கையிடம் கூறியுள்ளதாக கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தற்போது வேலைவாய்ப்பு சலுகைகளைப் பெறும் என்று நம்புபவர்களையும் பாதிப்பதுடன், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை இழக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு திரும்பாவிட்டால், அவர்கள் சார்பாக உத்தரவாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,
அத்துடன், கேள்விக்குரிய தொழிலாளி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே கோரியுள்ளார்.