ஒரு லீட்டர் எரிபொருளை 110 ரூபா என்ற குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க முடியும் என்ற போதிலும் அரசாங்கம் அதனை செய்யாமல் இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய மாஃபியா மூலம் அரசாங்கம் அந்த இலாபத்தை மக்களுக்கு இல்லாமல் செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
உலக சந்தையில் கடந்த ஆண்டு எரிபொருளின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதுடன் அதற்கான நன்மையை அரசாங்கம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.
எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், நாட்டின் பொருளாதாரமும் வியாகுலமடையும்.
பொது போக்குவரத்து, வெதுப்பக உணவு உற்பத்திகள் உட்பட அனைத்து உணவு பொருட்களின் உற்பத்திகளின் விலைகளும் மிக துரிதமாக அதிகரிக்கும்.
மிக விரைவில் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களும் அதிகரிக்கும். தோல்வியான வரிக்கொள்கை, சீனி, தேங்காய் எண்ணெய் போன்ற பிரச்சினைகள் காரணமாக நாட்டின் பொருளாதார பெரியளவில் பலவீனமடைந்துள்ளது.
இலங்கையில் இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் தற்போதைய அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.