பிரபல மலையாள பெண் டைரக்டர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, லட்சத்தீவில் இதுவரை கோரொனா தொற்று இல்லாமல் இருந்தது என்றும், தற்போது அங்கு கொரோனாவை மத்திய அரசு பரப்பி உள்ளது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே லட்சத்தீவில் நில உரிமைகள் தொடர்பான விதிகளில் அரசு மாற்றம் கொண்டு வந்து நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்கள் நடக்கின்றன. லட்சத்தீவில் இருந்து கேரளாவுக்கு நடைபெற்ற சரக்கு போக்குவரத்து மங்களூருக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் மலையாள நடிகர், நடிகைகள் பலர் மத்திய அரசை சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பெண் இயக்குனர் ஆயிஷாவின் கொரோனா பற்றிய பேச்சு பரபரப்பாகி அவருக்கு எதிர்ப்பை கிளப்பி உள்ளது. ஆயிஷா மீது நடவடிக்கை எடுக்கும்படி லட்சத்தீவை சேர்ந்த பா.ஜனதா தலைவர் அப்துல் காதர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஆயிஷா மீது 124 ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயிஷாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.