தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது 35 முக்கிய விஷயங்கள் பற்றி பிரதமருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.
மோடி- மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நலன்கள் தொடர்பான திட்டங்கள் பற்றி பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
இதன் பிறகு பிரதமர் மோடியும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க உள்ள முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தனது சிறப்பு பாதுகாப்பு படையில் உள்ள புல்லட் புரூப் காரை மோடி அனுப்பி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் டெல்லி சென்று இருந்தபோது இதுபோன்ற புல்லட் புரூப் காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் பிறகு தமிழக முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு இந்த சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க. மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் இன்று டெல்லி செல்ல உள்ளார். இருவரும் இணைந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார். பிரதமரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும் போது இவரும் உடன் இருக்க வாய்ப்புள்ளது.
தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
அப்போது மாநிலத்தின் தேவைகள் குறித்து அவர்களுடனும் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தடுப்பூசி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதுதொடர்பாக அமித்ஷாவையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
தமிழக டி.ஜி.பி. திரிபாதி விரைவில் ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாகவும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்புள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்கையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் ராணுவ தொழிற்சாலை அமைப்பது குறித்தும், இலங்கையில் அமைய உள்ள சீன துறைமுகத்தால் தமிழகத்துக்கு ஏற்பட உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் விவரிப்பார் என்று தெரிகிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும், மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து அளிப்பது குறித்தும், கடன் தள்ளுபடி குறித்தும் நிர்மலா சீதாராமனுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய ரெயில்வே மற்றும் வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயலையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்துக்கு ரெயில்கள் வாயிலாக ஆக்சிஜன் அனுப்பப்படுவது குறித்து இருவரும் பேச இருப்பதாக தெரிகிறது.
அரசுமுறை சந்திப்புகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தியை அவர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின் போது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும், தமிழக தலைவர்கள் சிலரும் உடன் இருப்பார்கள் என்று தெரிகிறது.
மக்களவையில் குறைந்த பட்சம் 10 எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 2013-ல் தி.மு.க.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி பயணத்தின் போது இந்த பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 18-ந் தேதி மாலை அல்லது 19-ந் தேதி காலை மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.