கல்லூரி மாணவர் ஒருவர் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி காளப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையடுத்து, கடந்த ஜூன் 11ம் தேதி மாலை 4 மணியளவில் எலி மருந்தை சாப்பிட்டு 19 வயது மாணவி தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற மாணவி மானாமதுரைச் சேர்ந்த கேசவகுமார் என்ற மாணவருடன் பழகி வந்ததும், அவர் நவிஇந்தியா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், மாணவியின் வீட்டின் அருகில் கேசவகுமார் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரி செல்லும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாணவியிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கிய கேசவகுமார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதுடன், மாணவியின் 2 சவரன் தங்க நகையினை வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனிடையே, கேசவகுமாருடன் பழகுவதை மாணவி நிறுத்திய நிலையில் தொடர்ந்து பணம் கேட்டு மாணவியை மிரட்டியதுடன், இருவரும் பழகிய போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் விரக்திஅடைந்த மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாணவர் கேசவகுமார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து கேசவகுமாரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க்கிறது.