எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் ஏற்புடையதல்ல எனவும் இவ்வாறு செய்தமைக்காக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமெனவும் அதிகாரபூர்வமாக சாகர காரியவசம் அறிவித்திருந்தார்.
இந்த நிலைப்பாடு கட்சியினதும், தமதும் நிலைப்பாடு எனவும் இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் சில உறுப்பினர்கள் விசேட கூட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க தயங்கப் போவதில்லை எனவும், எவருக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.