கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனா இன்று உலகப் பொருளாதாரத்தில் மிக சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூம் வழியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஒரு தொழில்துறை அல்லாத விவசாய நாட்டை ஒரு தொழில்மயமான நாடாக மாற்ற முயற்சிக்கும்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக வளர்ச்சியின் யதார்த்தத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொடங்கியது,” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவுக்கு வழங்கிய தலைமையை நாம் பாராட்ட வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனா இன்று உலகப் பொருளாதாரத்தில் மிக சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது.
“நாம் அனைவரும் இன்று கடந்த காலத்தை நினைவில் கொள்கிறோம். இலங்கையும் சீனாவும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக 1919 இல் சுதந்திரப் போரைத் தொடங்கின.
அந்த நேரத்தில் இலங்கையில் நாங்கள் “இலங்கை தேசிய காங்கிரஸை” ஆரம்பித்தோம். சீனா “மே 04” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. அந்த இயக்கத்தின் மூலம்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921 இல் உருவாக்கப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில், நான் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அவர்களை வாழ்த்துவதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
சீனாவை உலக சக்தியாக மாற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய தலைவர்களில் ஒருவர் ஜனாதிபதி டெங் சியாவோபிங். அந்த நேரத்தில், சீன அனுபவத்தின் அடிப்படையில், சீனாவுக்கு தனித்துவமான சோசலிசம் உருவாக்கப்பட்டது” என அவர் மேலும் கூறினார்.