சீனாவும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான (ஆசியன் – ASEAN) அமைப்பும் மியன்மாரில் இராணுவ அரசாங்கத்தை ஆட்சி செய்ய முயல்வது, ஆசியன் நாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்காக அந்நாட்டில் போராடும் அமைப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நிக்கய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியன்மார் இராணு அரசின் தலைவர் ஜெனரல் மின் ஆங் லாங்கை தலைநகர் யங்கோனில் முதல் தடவையாக சந்தித்து உரையாடிய சீனத் தூதுவர் வெளியிட்ட அறிக்கையில் அவரை ‘மியன்மாரின் தலைவர்’ எனக் குறிப்பிட்டிருப்பதையும் ஆசியன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரை முதல் தடவையாக ‘தலைவர்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியே, இரு தரப்பினரும் மியன்மார் தொடர்பான தமது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் ஆசியன் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் மியன்மார் இராணுவ அரசு, கண்ணியமான ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையிலான ஐந்து அம்ச திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் ஆசியனும் சீனாவும் இராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது தொடர்பில் பல ஆசியான் உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்திருப்பதோடு ஊடகங்களின் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
ஐந்து அம்ச தீர்வுத் திட்டத்துக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை காணமுடிவதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.
மியன்மார் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளுக்கு இச் செயல் பொருத்தமற்ற குறுக்கீடாகவே கருதப்பட முடியும் என்றும் நிக்கய் ஆசியா குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இராணுவ புரட்சிக்கு எதிரான போராட்டங்களில் சீன எதிர்ப்பு வலுவாகக் காணப்படும் அதேசமயம் சீன – மியன்மார் பொருளாதார உடன்படிக்கைக்கு ஏதுவான சீன வர்த்தக முதலீடுகளை இராணுவ ஆட்சி ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.