நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மற்றொருவருக்கு தன்னிச்சையாக தண்டனை கொடுக்கும் அளவில் எந்தவொரு அதிகாரமும் அரசியல் யாப்பில் தெரிவிக்கப்படவில்லை என ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் எந்தவொரு சூழ்நிலையிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருக்க கூடாது.அப்படியான அழுத்தம் ஏற்பட்டிருப்பின் முழங்கால்களின் கீழ் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும்.பிரச்சினையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதனை மீறி தலையில் வெடி வைத்துள்ளமை ஜனநாயக விரோத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச அளவலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக ரீதியிலான அரசியலில் நம்பிக்கையோடு செயற்பட்டு வரும் அனைத்து அரசியல் தரப்பினருக்கும் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மெய்பாதுகாவலர் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக மேற்கொண்ட துப்பாக்கி சூடு அல்ல. அவை திட்டமிடப்பட்ட கொலை சம்பவம் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். நாட்டில் இவ்வாறு செயற்பட பொலிஸார்,இராணுவத்தினருக்கு எந்த அதிகாரமும் இல்லை.இவ்வாறான சம்பவம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க இடமளிக்கின்றதா என்ற சந்தேகம், அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும்,இவ்வாறான தவறுகளை ஜனாதிபதியே செய்திருப்பினும் தவறு செய்தால் தட்டி கேட்கும் நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.
எனவே இவ்வாறான செயல்களுக்கு கூட்டமைப்பு தனது கண்டனங்களை வெளியிடும். குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அறிக்கை விடாமைக்கு எந்த உள்நோக்கமும், மறைமுக செயற்பாடோ,யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோ கூட்டமைப்பினருக்கு கிடையாது.
இச்சம்பவம் கொலை என்பது உறுதியாக தெரிகின்றது.இதற்கு அனைத்து அரசியல் தரப்பினரும் கண்டனங்களை வெளியிட வேண்டும். மேலும்,இதன்போது கொல்லப்பட்டவருக்கு நீதியும், கொலை செய்தவருக்கு தண்டனையும் பெற்று கொடுக்க அனைத்து தரப்பும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென கூறியுள்ளார்.வாய் பேச்சுக்களை நம்புவதை விட இராஜாங்க அமைச்சர் வீட்டின் சிசிடிவி காணொளிகளை பொலிஸாருக்கு வழங்க வேண்டும்.
தற்பாதுகாப்புக்காக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை வெளியில் எடுக்க கூடாது.இதனையும் மீறி தன் கையில் துப்பாக்கியை வைத்திருந்தமை கொலைக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.


















