இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதற்குக் காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் பரவலாக தடுப்பூசி அளிக்கப்பட்டு, பெரும்பாலான மக்கள் பெற்றுக்கொண்ட நிலையில், பொதுவெளியில் இனி முகக் கவசம் தேவை இல்லை என அங்குள்ள சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவித்தது.
கொரோனா பரவல் தொடர்பான சுகாதார கட்டுப்பாடுகளிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் கடந்த இரு தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு புதிதாகப் பரவி வரும் டெல்டா வைரஸே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி, இஸ்ரேலில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டை பொறுத்தமட்டில், நாளுக்கு தற்போது 100கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து ஒப்பிடுகையில், இது அதிகமான எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், பாதிப்பு உறுதி செய்யப்படும் நோயாளிகளில் 70% பேர்களில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது.
டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.