கண்டியில் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளம் ஊடாக நபர் ஒருவரை இழிவுப்படுத்தியமை தொடர்பில் கடந்த 25ஆம் திகதி இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பிட்டிய பிரதேசத்தில் மத ஸ்தலம் ஒன்றை நடத்தி செல்பவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபர் மற்றும் கடத்துவதற்காக அவருக்கு உதவிய மற்றைய சந்தேக நபர் இதுவரையில் மறைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் நண்பர் இருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் அம்பிட்டிய பிரதேசத்திற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்கள். பின்னர் சிலுவைகள் போன்று செய்து கடத்தப்பட்டவர்களை அதில் கட்டி கைகளில் ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதுடைய நபர்கள் இருவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.