இலங்கையில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கோவிட் தொடர்பான இறப்புகளின் திடீர் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய சுகாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.
நாட்டில் அல்பா – பிரித்தானிய மாறுபாடு கண்டறியப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
கோவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 1500 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 110 கோவிட் இறப்புகள் பதிவாகியிருந்ததாகவும், மே மாதத்தில் இது 806 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதன் பின்னர் ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் மையம் தெரிவித்துள்ளது.
எனவே, ஜூன் மாதத்தில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரிப்பதற்கான காரணத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று வைத்தியர் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கோவிட் வைரஸின் மிகவும் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக கூறியுள்ள அவர், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.