இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தற்கும் அதிகமாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் 1500க்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகியுள்ளனர்.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. நேற்றைய தினம் 98 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே கொழும்பில் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட காரணம் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பணி பகிஷ்கரிப்பு காரணமாக PCR பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது. தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை குறைவடைய அதுவே காரணமாகும்.
பணி பகிஷ்கரிப்பு காரணமாக சமூகத்தில் போன்றே வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.
எப்படியிருப்பினும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடையின் பின்னர் தினசரி அடையாளம் காணப்படும் எண்ணிக்கை சற்று குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.