எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ந்து வருவதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக வழங்கிய பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டு வந்து பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையை வேகப்படுத்துவதே இந்த அமைச்சரவை மாற்றத்தின் நோக்கம் என கூறப்படுகின்றது.
இதுவரையில் மக்களினால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள அமைச்சுகளுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர்கள் நீக்கப்படவுள்ளனர்.
சிறிய காலப்பகுதிக்குள் திறமை மற்றும் திறன்களை வெளிப்படுத்திய இராஜாங்க அமைச்சு பதவிகளில் உள்ள இளம் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை அந்த பதவிகளில் நியமித்து மிக முக்கிய பொறுப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள போதிலும், மக்கள் மத்தியில் அவை பிரபலமடையவில்லை என்பதனால் வருத்தமடைந்துள்ள ஜனாதிபதி இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகியுள்ளார் என குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.