ஆதி காலத்தில் மனிதன் வேட்டையாடிய இறைச்சி உள்ளிட்ட உணவுகளை நெருப்பில் சுட்டித்தான் சாப்பிட்டு வந்தான். அதனையடுத்து, நாகரிக வளர்ச்சி அடைந்ததையடுத்து, உணவு சமைத்தலில் பல புதிய விஷயங்களை புகுத்தினான். இன்றைக்கு நெருப்பில் சுட்டு சாப்பிடும் முறை மறைந்து விட்டது.
தற்போது அசைவ உணவகங்களில் கிரில் சிக்கன், கிரில் ஃபிஷ் என விதவிதமான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி நெருப்பில் வாட்டப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லதா? தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்வி எழுந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதே கிடையாது.
உண்மையில் நெருப்பில் வாட்டப்படும், நெருப்பால் கருகாத உணவு நல்லதுதான். ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் கிரில் உணவில் ஏராளமான மசாலாக்கள் சேர்க்கப்பட்டே நெருப்பில் வைக்கப்படுகின்றன. இது உடல் நலத்துக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய்?
இறைச்சிகளைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது அதில் இருந்து பாலிசிஸ்டிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன் (பிஏஎச்) என்ற இயற்கை ரசாயனம் வெளிப்படுகிறது. இந்த ரசாயனமானது சில வகையான புற்றுநோய்களை ஏற்படுத்திவிடும்.
அதிலும் இறைச்சியில் எண்ணெய், மசாலா பொருட்கள் மட்டுமின்றி சுவை மற்றும் நிறத்துக்காகக் கூடுதல் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு நெருப்பில் வாட்டும்போது அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதனால், நேரடியாக நெருப்பில் சுடப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோய்
கிரில் உணவுக்காகத் தயாரிக்கப்படும் இறைச்சி ஃபிரஷ்ஷானது கிடையாது. அந்த இறைச்சி மீது மசாலா, உப்பு அதிகளவில் சேர்க்கப்படுகிறது. அந்த மசாலா 24 மணி நேரத்துக்கு ஊற வைக்கப்படுகிறது.
இதனால், இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுவதால், அதிகப்படியான சோடியம் உள்ள உணவு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அதோடு இல்லாமல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்துவிடும்.
உடல் எடை
கிரில் உணவுகளில் ஏஜிஇ எனப்படும் (advanced glycation end products) கிளைக்கோடாக்சின் வெளிப்படுகிறது. இவை உடலில் செல்கள் அளவில் வீக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும் உடல் எடை அதிகரிக்கச் செய்து விடும்.
குழந்தையின்மை
கிரில் உணவில் உள்ள ஏஜிஇ நச்சுக்கள் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்னையைக் கூட ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நச்சுக்கள் கர்ப்பப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கருத்தரித்த எம்ரியோ கர்ப்பப்பையில் பதிவாவதற்கான வாய்ப்பு குறைந்து விடும்.