தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனி வழிகாட்டுதல் குழுவொன்றினை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,
முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு குடிநீர், குடியிருப்பு, கழிவறை வசதி, மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்குதல், தெருவிளக்கு மற்றும் மின்வசதி, இலவச எரிவாயு இணைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி ஊடாக தமிழை கற்பிப்பதற்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.