ரிஷாத் பதியுதீன் வீட்டில் , உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற அரசாங்கத்தில் எவரும் தலையிட கூடாது எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் செயற்பாடுகளை கண்காணிக்க பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறும்,அவ்வாறு சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் புதிய சட்ட திருத்தங்களை முன்னெடுப்பது குறித்தும்,சிறுவர் பாதுகாப்பிற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளோம்.அதற்கமைய 14 வயதிற்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது குறித்து ஆராயவும், அவ்வாறு சிறுவர்களை வலுக்கட்டாயமாகவோ அல்லது வேறு காரணங்களை காட்டி பணிக்கு அமர்த்தும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் எனக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்ந்லையில் இப்போதே அதற்கான வேலைத் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.இந்த திடம் பொலிஸாரை இணைத்து அவர்கள் மூலமாக முன்னெடுக்கும் வேலைத் திட்டமாகும். அதேபோல், சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுத்து 18 வயதிற்கு குறைந்த எவரும் பணிக்கு அமர்த்தப்படக் கூடாது என்ற சட்ட திருத்தங்களை முன்னெடுக்க ஆராயுமாறும் பிரதமர், நீதி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக செயற்படும் நபர் வீட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லதல்ல என்றும் இதனையே சகலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் உயரிய குடும்பங்களில் உள்ளவர்களை அவர்களின் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள மலையகத்தில் உள்ள சிறு வயது பிள்ளைகளை பணிக்கு அமர்த்தும் மாபியா ஒன்றும் இடம்பெற்று வருவதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே இதனை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், இதில் யார்,எவர் என்ற பாகுபாடு இல்லாது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.