கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 151, கேரளாவில் 93, ஒடிசாவில் 69 பேர் உள்பட நேற்று 447 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,28,309 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-ம் அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுத்தது.
கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் தொற்று உயர்ந்தது. இதனால் 11 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வந்த ஒரு வார பாதிப்பு இம்மாதத்தின் முதல் வாரத்தில் உயர்ந்தது.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரையிலான வாரத்தில் மட்டும் 2.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இது அதற்கு முந்தைய வாரத்தை விட 7.5 சதவீதம் அதிகமாக இருந்தது. பரவல் மீண்டும் உயரத் தொடங்கியதை அடுத்து பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் பலனாக தற்போது ஒரு வார பாதிப்பு 4 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 2.74 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு வார பாதிப்பு 4.2 சதவீதம் வரை குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 35,499 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 954 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 18,607, மகாராஷ்டிராவில் 5,508, ஆந்திராவில் 2,050, தமிழ்நாட்டில் 1,956, கர்நாடகாவில் 1,598, ஒடிசாவில் 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 151, கேரளாவில் 93, ஒடிசாவில் 69 பேர் உள்பட நேற்று 447 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,28,309 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,33,996, கர்நாடகாவில் 36,793, தமிழ்நாட்டில் 34,317 பேர் அடங்குவர்.
நேற்றைய பாதிப்பைவிட நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 39,686 பேர் மீண்டு வீடு திரும்பினர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 457 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,02,188 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 4,634 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,11,590 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 50 கோடியே 86 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று நாடு முழுவதும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 48.17 கோடியாக உயர்ந்துள்ளது.