முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பயணிகளாக வாகனத்தில் ஏறும் நபர்கள் குற்றவாளிகளாகவும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் ஏறிய இருவரால் முச்சக்கரவண்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முச்சக்கரவண்டியின் சாரதிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு கூறப்பட்ட பின், அந்த இடத்திற்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி கொள்ளையிடப்பட்டுள்ளது.
எனினும், கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியுடன் நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 28 வயதுடைய நிட்டம்புவ, ருக்கஹவில பகுதியைச் சேர்ந்தவர்.
மற்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.