வேகமாக பரவி வரும் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை குறைந்தது நான்கு வாரங்களுக்கு முடக்கி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அமைப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 3,000 கோவிட் தொற்றுக்கள் பதிவாகின்றன, மேலும் நாளாந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 100 ஐ நெருங்குகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும், சுமார் ஆயிரம் கோவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளும் கோவிட் சடலங்களால் நிரம்பியுள்ளன. அத்துடன், வைத்தியசாலைகளின் விடுதிகளும் கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில், வைத்தியசாலைகளில் திறன் தாங்க முடியாததால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.