நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பால்மா பக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து குறித்த பால்மா பக்கெட் ஒன்றை பெறுவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
சந்தைகளில் வேறு வகையான பால்மா கிடைக்காததால், மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் குறித்த பால் மா பக்கெட்டை கொள்வனவு செய்வதற்காக தாங்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பால் மா கொள்வனவு செய்ய வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை அம்பேவல பாற்பண்ணை தொழிற்சாலையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.