கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் ஒருகொடவத்த ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது போலிநாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போலி நாணயத்தாள்களை அச்சிட்டமை மற்றும் அதனைப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 100 ரூபா பெறுமதியான 25 போலி நாணயத்தாள்களையும், 500 ரூபா பெறுமதியான 18 நாணயத்தாள்களையும், 1,000 ரூபா பெறுமதியான ஒரு நாணயத்தாளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, போலி நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி ஒன்றையும் ஏனைய பல பொருட்களையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.