அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தற்போதைய ஊரடங்கு தோல்வி என்பது தெளிவாகியுள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீதிகளில் அத்தியாவசியமற்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த முடக்கல் தோல்வி என்பதை காண முடிவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும்,
சீனாவில் தொற்றுநோயால் இறந்தவர்களை விட இலங்கையின் இறப்புக்கள் இருமடங்காக மாறியுள்ளன.
தொழில் வல்லுநர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள், விளையாட்டுத்துறையினர் போன்றோர் இலங்கையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200ஆக இருக்கும் நிலையில், இந்த வாரம் 10,000 தொற்றுகள் கண்டறியப்பட்டன.
எனினும் இலங்கையில் தொற்றுநோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 200 பேர் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் உத்தரவு பிறப்பிப்பதால் சுகாதார ஊழியர்கள் அழுத்தத்தில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
சீனியின் விலை 210 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, சீனி 160 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை சீனி மோசடியின் விளைவாக 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.