கொரோனா கால கட்டம் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கொரோனா கால கட்டம் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்தான் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சளி மற்றும் காய்ச்சல் மீண்டும் மீண்டும் வருவது, குளிர் காலங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவது, ஒவ்வாமை, ஆஸ்துமா பாதிப்பை எதிர்கொள்வது, அடிக்கடி நோய் தொற்றுகளுக்கு ஆளாவது இவை பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் 70 சதவீதத்தை மேம் படுத்திவிடலாம். உணவின் ஒரு அங்கமாக புரோ பயாடிக் உணவுகளை சேர்த்துக்கொள்வதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
இன்றைய வாழ்க்கை முறையில் சமச்சீரற்ற உணவு, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், காற்று மாசுபாடு மற்றும் முதுமை இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்குகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம்: இது நீடித்துக்கொண்டிருந்தால் தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். இத்தகைய காரணிகள் அனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மையையும் குறைக்கின்றன.
அடிக்கடி தொற்றுகள்: காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அபாயங்களை கையாளுவதற்கு ஏற்ப உடலானது இயற்கையான ஆன்டிபாடிகளை கொண்டிருக்க வேண்டும்.
நோய்வாய்ப்படும் வாய்ப்பு: பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அடிக்கடி நோய்களை ஏற்படுத்தும். நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வரும் செயல்முறையையும் தாமதப்படுத்தும்.
சோர்வு: போதுமான அளவு தூங்கினாலும் கூட பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டிருந்தால் ஒருவித மந்த நிலையை உணரக்கூடும். கடினமான வேலைகளை செய்யாவிட்டாலும் கூட உடல் சோர்வுடன் காணப்படும். உடல் ஆற்றல் குறைவாக இருப்பதையும் உணரலாம்.
புரோபயாடிக்குகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்ததும், பல்வேறு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டதுமான வானவில் உணவு பழக்கத்தை பின்பற்றலாம். புரோபயாடிக் உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
இங்கிலாந்தில் உள்ள லாக்பரோ பல்கலைக்கழகம் மூலம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 16 வாரங்களுக்கு தினமும் புளித்த தயிர் (யோகர்ட்) சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சுவாச நோய்த்தொற்று ஏற்படுவதை 50 சதவீதம் குறைக்கவும் யோகர்ட் உதவியது உறுதி செய்யப்பட்டது.