யூடியுப் நிறுவனம் தடுப்பூசிகளுக்கு எதிரான அனைத்து வீடியோக்களையும் தடை செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. தட்டம்மை, சின்னம்மை ஆகியவற்றுக்குப் போடப்படும் தடுப்பூசிகளுக்கு எதிரான வீடியோக்களும் அகற்றப்படவுள்ளன.
தடுப்பூசிகளுக்கு எதிரான பிரபல ஆர்வலர்களையும் யூடியுப் நிறுவனம் தடை செய்யும் என்று அந்த சமூகதளம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் பற்றி வெளியிடப்பட்ட பொய்த் தகவல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், அது குறித்து முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று யூடியுப் குறிப்பிட்டது.
யூடியுபில் வெளியிடப்படும் தடுப்பூசிகளுக்கு எதிரான வீடியோக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து நிறுவனம் மீது பல ஆண்டுகளாகக் குறைகூறப்பட்டு வந்தது.
மக்களுக்கு தவறான தகவல்களை அளித்து தடுப்பூசி பெறுவதில் அவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதற்கு சமூக ஊடகங்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவதற்கான தடை அமுல் படுத்தப்பட்ட கடந்த ஆண்டு தொடக்கம் 130,000 வீடியோக்கள் அகற்றப்பட்டதாக கூகுள் உரிமை நிறுவனமான யூடியுப் தெரிவித்துள்ளது.