புத்தர் பரிநிர்வாணம் அடைந்த உத்தரபிரதேச குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கான முக்கிய யாத்திரைக்காக, அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் 100க்கும் மேற்பட்ட பிக்குகள், இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
கடந்த ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களுக்கிடையேயான மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த வாக்குறுதியை வைத்து இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணி எதிர்வரும், பூரணை (அக்டோபர் 20) குஷிநகருக்கு புறப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), வீட்டுவசதி மற்றும் சமூக உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள்.